Friday, December 24, 2010

சென்னையில் கன்னியாகுமரி சங்கமம்!

சென்னையில் குமரி சங்கமம் என்ற நிகழ்ச்சி, சென்னை, எழும்பூர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில், கடந்த 19 -12 -2010 ஞாயிறு அன்று   சிறப்பாக நடைபெற்றது.

சென்னையில் வாழும் லட்சக்கணக்கான குமரி மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும், குமரி மாவட்டத்தை முன்னேற்றும் இலக்குடனும், 'தமிழ் மையம்' சார்பில் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். மிகக் குறுகியகால அவகாசத்தில், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும், அலை அலையாய் திரண்ட குமரி மக்களின் வருகையால் நிகழ்ச்சி முழு வெற்றியடைந்தது.

துடிப்பான சமூக இயக்க வரலாறு கொண்டதும், புதிய முயற்சிகளுக்கு பேர் பெற்றதுமான கன்னியாகுமரி மாவட்டத்தை, அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும் வகையில் 'கன்னியாகுமரி 2020' என்னும் முன்னோக்கு ஆவணம் அந்நிகழ்ச்சியில் வெளியிடப் பட்டது.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு. சுரேஷ்ராஜன், அந்த ஆவண நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.தமிழ் மையம் இயக்குநர் அருள்திரு ஜெகத் கஸ்பர், நிகழ்ச்சியின் நோக்கம் குறித்தும், ஆவண நூலின் உள்ளடக்கம் பற்றியும் அறிமுக உரை நிகழ்த்தினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண்மை, மீன்வளம், தொழில்வளம், வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல், நீர்வளம், கல்வி, அடிப்படை கட்டுமான வசதி போன்றவற்றில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி குறித்து பல்வேறு அறிஞர்களும், கல்வியாளர்களும் கருத்துரை வழங்கினர். ஆவணப்பட இயக்குநர் ஆளூர் ஷாநவாஸ் தொகுப்புரையாற்றினார்.
அண்ணா துரை நன்றியுரையாற்றினார்.
 
குமரி மாவட்டத்தின் தனித்துவம் மிக்க கலாசாரம் மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குமரி மக்களின் பேச்சு வழக்கை, குறிப்பாக விளவங்கோடு வட்டார வழக்கை மேடையில் கலைஞர்கள் பேசிக்காட்டிய போது அரங்கம் சிரிப்பலையில் ஆழ்ந்தது. களறிச் சண்டை, தப்பாட்டம், கிராமிய பாடல்கள் என நிகழ்ச்சி களை கட்டியது.
குமரி மாவட்டத்திலிருந்து பெருமளவில் சென்னைக்கு புலம் பெயர்ந்த மக்களாகிய ஆளூர் மக்கள், இந்த நிகழ்ச்சியில் அதிக அளவில் பங்கேற்றனர். அறிமுக உரையாற்றிய ஜெகத் கஸ்பர் அவர்கள், சென்னை வாழ் ஆளூர் மக்களின் சிறப்பைப் பற்றி பிரத்யேகமாக குறிப்பிட்டுப் பேசிய போது, அரங்கில் கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து, குமரி மாவட்ட உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில், குமரி மாவட்ட பாரம்பரிய உணவு வகைகள் பிரத்யேகமாக சமைத்து பரிமாறப்பட்டன.
 
சம்பா அரிசிச் சோறு, பருப்பு, சாம்பார், புளிசேரி, வாழைக்காய் துவரன், அவியல், வெள்ளரிக்காய் பச்சடி, உருளைப் பொரியல், முட்டைக்கோஸ் பொரியல், இஞ்சிப்பச்சடி, இஞ்சித்தீயல், நார்த்தங்காய், மாங்காய், நெல்லிக்காய் ஊறுகாய்கள், பால், பருப்பு, அடை பாயசங்கள் இவற்றுடன் இன்னும் பல அசைவ உணவுகளும் கல்லூரி வளாகத்திலேயே தயாரித்து வழங்கப் பட்டன.
புட்டு - பயறு- பப்படம், பனங்கிழங்கு, கூவக்கிழங்கு, காய்ச்சல் கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகிய உணவு வகைகளும்,
அரிய உணவு வகைகளான முந்திரிக்கொத்து, பணியாரம், பழரோஸ்ட், கறுப்பு அல்வா, விரலி இலை - பனை ஓலை கொழுக்கட்டைகள்,
குழல் அப்பம் ஆகிய சைவ உணவு வகைகளும் அணிவகுத்தன..
அரிய மீன் உணவு வகைகளான வஞ்சிரம், நெத்தலி, சாளை வறுத்த கறி, இறால் மசாலா, சுறாபுட்டு, சூரை, தேடு, வெளமீன் கறி, நண்டு மசாலா ஆகியவையும் பிரத்யேகமாக தயாரித்து பரிமாறப்பட்டன. உணவுத் திருவிழாவில் பங்கேற்ற மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் காணப்பட்டனர்.
சென்னையிலேயே குமரியின் வாசனையை நுகர்ந்த சுகத்தோடும், அடுத்தது இது போன்ற ஒரு சங்கமம் விரைவிலேயே நடக்காதா என்ற ஏக்கத்தோடும் மக்கள் கலைந்து சென்றனர்.

Tuesday, December 14, 2010

ஆளூர் அனஸ் ஹாஜியார் - ஒரு சகாப்தம்!

வம்பர் 25 ஆம் நாள் அதிகாலை, தொலைபேசி வழியே அந்தத் தகவல் வந்த
போது என்னால் நம்பவே முடியவில்லை. மறு முனையில் பேசிய குரல், அனஸ் ஹாஜியார் இறந்து விட்டதாகச் சொன்ன போது, 'இது பொய்யாக இருக்கக் கூடாதா' என்றே என் மனம் பிராத்தித்தது. ஏனென்றால் அனஸ் ஹாஜியார் ஒரு சகாப்தம்.

ஹாஜி.S. முஹம்மது அனஸ் அவர்கள், ஆளூரில் தோன்றிய ஆளுமைகளில் மிக முக்கியமானவர். பொதுவாழ்வில் நேர்மையையும் தூய்மையையும் கடைபிடித்து, எல்லோருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுத்ததில் ஆளூரின் சீதக்காதி அவர்.

இன்று நமக்கெல்லாம் வாய்த்திருக்கிற அல்லது நம்மில் பலருக்கும் வாய்க்காத பல அருட்கொடைகளை இறைவன் அவருக்கு என்றைக்கோ கொடுத்துவிட்டான். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே தைக்காத் தெருவில் கம்பீரமாக கட்டப்பட்ட அவரது வீடு அவரது செழிப்புக்கு சான்றாகத் திகழ்கிறது.அந்த வீட்டை 'புது வீடு' என்றுதான் ஆளூர் மக்கள் அழைப்பார்கள். ஓலைக் கூரையும், சாணித் தரையுமாக இருந்த ஆளூர் வீடுகளுக்கு மத்தியில் அவர் கட்டிய மாடி வீடு ஆளூர் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியது. நாமும் இவரைப் போல முன்னேறி இது போன்று ஒரு வீட்டை எழுப்ப வேண்டும் என்ற ஆர்வத்தை விதைத்தது.

அனஸ் ஹாஜியாரின் நடையும் உடையும் மிகப் பிரசித்தமானது.
வெள்ளை வேஷ்டி, வெள்ளை ஜிப்பா,வெள்ளைத் தொப்பி,வெள்ளைத் துண்டு அணிந்து பளிச் என அவர் காட்சியளிப்பார். அவர் நடந்து செல்லும் போது வெளிப்படும் அத்தர் வாசனையும், ஷூ சத்தமும் 'அவரைப் பார்க்காமலேயே அவர்தான் போகிறார்' என்று சொல்ல வைக்கும்.

பள்ளியில் பாங்கு சொல்லப்பட்ட சில நொடிகளில் அவர் வீட்டிலிருந்து பள்ளிவாசல் நோக்கி நடந்து வருவார். தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களும், கதைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களும் அவரைக் கண்டவுடன் அமைதியாகி ஆங்காங்கே ஒதுங்கி விடுவார்கள். அவர்களைப் பார்த்துப் புன்னகைக்கும் அனஸ் ஹாஜியார், 'இன்னும் என்ன விளையாட்டு எல்லோரும் பள்ளிக்கு வாருங்கள்' என்று சொல்லி விட்டு கடந்து போவார். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நிற்கும் இளைஞர்கள் எல்லாம் அவரைக் கண்டவுடன் வேட்டியை இறக்கி விட்டு, ஸலாம் சொல்லி மரியாதை அளிப்பதை ஆளூரில் அடிக்கடி பார்க்க முடியும். அந்த அளவிற்கு கண்ணியம் பெற்றவராக அவர் வாழ்ந்தார்.


ஆளூரில் நடைபெறும் சுக துக்கங்கள் அனைத்திலும் அவரைக் காண முடியும். பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பவர்கள் அவரை அணுகி ஆலோசனைப் பெற்று தீர்வைத் தேடினர். ஊர் கூட்டங்களின் போது எழும் தகராறுகளையும், மோதல்களையும் அவர் தீர்த்து வைக்கும் விதம் எல்லோரையும் ஈர்த்து விடும். பிரச்சனை செய்பவர்கள்,அவரது குரலுக்கு கட்டுப் பட்டு அமைதியாகி விடுவதை எல்லா கூட்டங்களிலும் பார்க்க முடியும்.


25 ஆண்டுகளுக்கு முன்னரே குடும்பத்தோடு புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட சிறப்புக்குரியவர் அவர். அந்த வகையிலும் ஆளூர் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் அவர். கல்வியின் வாசனை நுகராத சமூகச் சூழலில், தமது பிள்ளைகளை உயர் கல்விக்கு அனுப்பி அதன் மூலம் அவர்களின் தலை நிமிர்வுக்கு வழி வகுத்தவர் அவர்.
அத்தகைய சிறப்புக்குரியவரின் இழப்பு ஆளூருக்குப் பேரிழப்பாகும்.

ஆளூர் தனது மரபையும், பழமையின் பொலிவையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. நெசவுத் தொழிலின் தொட்டிலாக விளங்கிய ஆளூர் தெருக்களில் இன்றைக்கு அதன் அறிகுறி கூட இல்லை. கோரைப் பாய் நெய்தவர்களும், அகர்பத்தி உற்பத்தியில் உச்சத்தை தொட்டவர்களும், தென்னை மற்றும் நெல் சாகுபடியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்களும், மண்ணை விட்டு மறைந்து வருவதால் அந்தத் தொழில்களும் மறைந்து வருகின்றன.

பரபரப்பு மிகுந்த சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஆளூர் செல்லும் சாலையை நோக்கித் திரும்பிய மறு நொடியே அமைதி நம்மை ஆட்கொண்டு விடும். மலைத் தொடரும் பசுமையும் சூழ்ந்த அந்தப் பாதையின் இரு புறமும் உள்ள வயல் வெளிகளும், தென்னை மற்றும் வாழை மரங்களும் இதயத்தை ஈர்த்து விடும். அந்த அழகியலை இப்போதெல்லாம் அனுபவிக்க முடியவில்லை. விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறிப்போனதில் அந்த வயல் வெளிகள் மறைந்து கான்கிரீட் கட்டிடங்கள் உருவாகிவிட்டன.

ஆளூரில் மார்க்க அறிஞர்களும், கல்விச் சேவையாற்றிய ஆசிரியப் பெருந்தகைகளும், அரசுத் துறைகளில் பணியாற்றிய பெருமக்களும் ஏராளம் பேர் இருந்தனர். அவர்களிடம் கலந்துரையாடி அதன் அடிப்படையில் எதையும் முடிவு செய்யக்கூடிய மக்களாக ஆளூர் மக்கள் இருந்தனர். இன்றைக்கு அத்தகைய ஆளுமைகளும் இல்லை; ஆளுமைகளை அங்கீகரிக்கும் நிலையில் மக்களும் இல்லை.

ஆளூர் முஸ்லிம்களின் வரலாற்றில் அவர்களின் 'புலம் பெயர்வு' மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. வாழ்வாதாரத்தை தேடி சென்னைக்குப் புலம் பெயர்ந்தவர்கள் புதுப்பேட்டையில் வலுவாகக் காலூன்றி நிலை உயர்ந்தனர். தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு பெரும்பகுதி மக்கள் புலம் பெயர்ந்தது போலவே, கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திற்கும் ஆளூர் மக்கள் புலம்பெயர்ந்தனர். அப்படி சென்றவர்களில் மிகமுக்கியமானவர் அனஸ் ஹாஜியார்.

திருவனந்தபுரம் சாலை பஜாரில் உள்ள அவரது தாஜ் மஹால் ஸ்டோர்ஸ் நிறுவனம் இன்றைக்கும் இயங்கி வருகிறது. அவரது வாரிசுகளில் பெரும்பான்மையினர் திருவனந்தபுரத்தில் நல்ல நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.அந்தத் திருவனந்தபுரத்தில் வைத்துத்தான் அனஸ் ஹாஜியாரின் இறுதி மூச்சும் அடங்கியிருக்கிறது.

கொட்டித் தீர்த்த பெருமழையின் பேரிரைச்சலுக்கு இடையே அனஸ் ஹாஜியாரின் தைக்காத் தெரு தாஜ் மன்ஸிலில் பெரும் நிசப்தம் நிலவியது. அங்கே திரண்டு நின்ற மொத்த ஆளூர் மக்களும் அவரது நினைவில் ஆழ்ந்தனர். அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல் வடக்குப் பள்ளிதெரு புதிய பள்ளிவாசலுக்கு கொண்டுவரப் பட்டது.அங்கு அவருக்கு ஜனாஸா தொழுகை நடைபெற்றது.

அந்தப் பள்ளிவாசல் சிதிலமடைந்து பழைய நிலையில் இருந்த போது, அதை இடித்து விட்டு புதிய பள்ளிவாசல் கட்டவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஆளூர் மக்கள் ஒன்று கூடி அதன் சாத்தியக் கூறுகள் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனஸ் ஹாஜியார் முதல் ஆளாக எழுந்து நின்று ஒரு லட்ச ரூபாயைக் கொடையளித்தார். அவரது அந்த செயல் பள்ளிவாசல் கட்டிடக் கமிட்டிக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், உற்சாகமூட்டும் வகையிலும் அமைந்தது. அதனால், மற்ற செல்வந்தர்களுக்கும், 'பள்ளிவாசல் பணிக்கு பெரும் தொகை கொடுக்க வேண்டும்' என்ற எண்ணம் பிறந்தது.அழகிய முறையில் புதிய பள்ளிவாசலும் எழுந்தது.

கடந்த ரமலான் மாதத் தொடக்கத்தில் அந்தப் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா கண்டபோது,அனஸ் ஹாஜியார் திருவனந்தபுரத்தில் உடல் நலிவுற்று இருந்தார். திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுப்பதற்காக கட்டிடக் கமிட்டி நிர்வாகிகள் அவரை சந்தித்த போது., 'நான் அந்த பள்ளியில் வந்து தொழ வேண்டும்; அங்கேயே என் உயிர் பிரிய வேண்டும்' என்று அவர் உருகி கண்ணீர் வடித்திருக்கிறார்.

எந்தப் பள்ளியில் வந்து தொழ வேண்டும் என்று அவர் ஆசைப் பட்டாரோ,
அந்தப் பள்ளியிலேயே அவருக்குத் தொழுகை நடத்த வேண்டிய நிலை வந்து விட்டது.

அவரது பிழைகளை மன்னித்து , மறுமையில் அவருக்கு சுவனத்தை அருள இறைவனிடம் பிரார்த்திப்போம்.அவர் காட்டிச் சென்ற நல்ல முன்னுதாரணங்களைப் பின் பற்றி வாழ நாம் உறுதியேற்போம்.

ஆளூர் ஷாநவாஸ்
28-11-2010,சென்னை.

Friday, December 3, 2010

ஆளூர் - ஒரு இனிய அறிமுகம்!


குமரிமாவட்டத்தில் அமைந்துள்ள இனிய இயற்கை எழில் கொஞ்சும் ஆளூர் கிராமம், நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில் 8 .கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ஆளூரின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 70 % இஸ்லாமிய பெருமக்களைக் கொண்டது. நேர்த்தியாக அமைந்துள்ள ஐந்து தெருக்களிலும் முஸ்லிம்களின் வீடுகள் அமைந்துள்ளன. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 'அஞ்சுவண்ணம்' எனும் மொழிப்பட்டம் கொண்டு அழைக்கப்படும் ஐந்து ஊர்களில் ஒரு ஊர் ஆளூர் ஆகும்.

முன்னாளில் மக்கள் நெசவுத் தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வந்த போதிலும், இப்போது பெரும்பாலானவர்கள் சென்னையில் தொழில் துறையில் ஈடுபட்டு அங்கேயே வாழ்வை அமைத்துக் கொண்டனர். தற்போது ஆளூரில் விவசாயம் மற்றும் பல்வேறு சிறு தொழில்கள் செய்து மக்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். இருப்பினும் ஊதுபத்தி உற்பத்தி விற்பனையும் பெருமளவில் இங்கு நடக்கிறது. வெளிநாடுகளில் வேலைபார்ப்பவர்களும் அதிகம் உண்டு.

சுமார் 3500 முஸ்லிம்களைக் கொண்ட ஆளூர் ஜமாத்தில் இரண்டு ஜூம்மா பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன.ஒவ்வொரு வாரமும்  ஒவ்வொரு பள்ளியில் ஜூம்மா நடைபெறும். பதுரு சகாபாக்களின் நினைவாக ஒரு பள்ளி உள்ளது. அங்கு பெண்களுக்கான தொழுகைகள் நடைபெறுகின்றன.

[கோட்டாறு ரஹ்மானிய்யாச் சங்கத்தால் 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட, குமரிமாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றுப் பொக்கிஷமான 'பெட்டகம்'  நூலில் இடம்பெற்ற கட்டுரை]